வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை கூட்டமைப்பின் 21ம் ஆண்டு விழா, தமிழ்ப் பெருவிழாவாக, அமெரிக்காவின் ஆர்லாண்டோ நகரில் ஜூலை 4ம்தேதி முதல் மூன்று நாட்களுக்கு சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எங்கெல்லாம் வசிக்கிறார்களோ அங்கெல்லாம் தமிழோசையை முழங்கச் செய்வது தமிழர்களின் சிறப்பு.

வட அமெரிக்கா மற்றும் கனடாவில் வசிக்கிற தமிழர்கள் ஒன்றிணைந்து வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை கூட்டமைப்பை (Federation of Tamil Sangams in North America) ஏற்படுத்தியுள்ளனர். இந்த அமைப்பின் 21-ம் ஆண்டு விழா, வருகிற ஜூலை 4, 5 மற்றும் 6-ம் தேதிகளில் தமிழ்ப் பெருவிழாவாகக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புளோரிடா மாகாணத்தில் உள்ள ஆர்லாண்டோவின் பாப் கார் சென்டர் பார் பர்பார்மன்ஸ் ஆர்ட்ஸ் அரங்கில் இத்திருவிழா நடைபெறுகிறது.

இவ்விழாவின் சிறப்பு நிகழ்ச்சிகளாக, பிரபல கர்நாடக இசைப் பாடகி சுதா ரகுநாதனின் இசைக் கச்சேரியும், பின்னணிப் பாடகி சின்மயி மற்றும் கிரீஸ் பங்குபெறும் அய்ங்கரன் அனிதா குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

தமிழ் திரைப்பட இயக்குநர்கள் தங்கர் பச்சான், சீமான், சன் தொலைக்காட்சியின் ‘அசத்தப் போவது யாரு’ புகழ் ஈரோடு மகேஷ், இசை அறிஞர் மம்மது, பேராசிரியர் சுப வீரபாண்டியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்கிறார்கள்.

சிறப்பு நிகழ்ச்சியாக நடனக் கலைஞர் நர்த்தகி நடராஜின் சிலப்பதிகார நாட்டிய நாடகம் நடைபெற உள்ளது.

பல்வேறு தமிழறிஞர்கள் பங்கு பெறும் இலக்கியக் கருத்தரங்கும் நடைபெற உள்ளது. 21-ம் நூற்றாண்டில் தமிழ் இயல், இசை மற்றும் நாடக மறுமலர்ச்சி எனும் தலைப்பில் இக் கருத்தரங்கு நடைபெறுகிறது.

தமிழ் இணையதளம் மற்றும் வலைப்பூ பதிவாளர்களுக்கு சிறப்புப் பயிற்சி முகாம் ஒன்றும் இத்திருவிழாவில் நடைபெற உள்ளது.

வேதாத்ரி மையம் மூலம் சிறப்புமிக்க ஆசிரியர்களைக் கொண்டு யோகா பயிற்சி வகுப்புகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நகைச்சுவையும் கருத்துச் செறிவும் மிக்க பட்டிமன்றம் மற்றும் கவியரங்கத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் திருவிழாவின் முக்கியப் பகுதியாக தொடர் மருத்துவக் கல்வி, தொழில் முனைவோர் கருத்தரங்கு, மணமக்கள் தேர்வு மற்றும் அமெரிக்க இளைஞர் அமைப்பு நிகழ்ச்சிகள் பலவும் நடைபெற உள்ளன.

தமிழின் இனிய சுவையில் திளைக்கவும், ஆயிரக்கணக்கான தமிழ் மக்களோடு கலந்து பழகவும் வகை செய்யும் இத் தமிழ் திருவிழாவில் அனைவரும் கலந்து கொள்வது அவசியம் என தமிழ்ச் சங்கப் பேரவைத் தலைவர் தில்லைக் குமரன் மற்றும் தமிழ்த் திருவிழா ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

விழாவை பிரபலப்படுத்த http://www.fetna2008.org/2008/PromoteFetna.php பக்கத்தில் உள்ள சின்னங்களை பயன்படுத்தவும்.

அப்துல் கலாம் வாழ்த்து:

வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் 21வது ஆண்டு விழாவையொட்டி முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 21 வது தமிழ் விழா கொண்டாடும் இச்சமயத்தில் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தமிழனாக கூடி இந்தியனாக பரிணமித்து அறிவார்ந்த விழிப்புணர்ச்சி பெற்ற உலக குடிமகனாக நீங்கள் மாறி இருக்கிறீர்கள். ஏனென்றால் இந்தியாவுடனான உங்களது தொப்புள் கொடி உறவு மிகப் பெரிய ஆன்ம பலம் பொருந்தியது.

54 கோடி இந்திய இளைஞர்களுக்கு நல் வழிப்பாதையை காட்டி, அவர்களது கற்பனை திறனை வளர்த்து, என்னால் முடியும் என்ற நம்பிக்கையை வளர்க்கும் பணியில் உங்களது அறிவை தாருங்கள். உங்களது அனுபவத்தை தாருங்கள். வாருங்கள் உங்கள் வருங்கால சந்ததி வளர்ந்த இந்தியாவில் அடி எடுத்து வைக்க வளமான இந்தியாவை 2020 க்குள் உருவாக்குவோம் என்று தெரிவித்துள்ளார்.

மூலம்

Advertisements