சென்னையில் உள்ள மாநில குற்ற ஆவண பாதுகாப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த, குற்றவாளிகள் உள்ளிட்ட 2 லட்சம் பேரின் கைரேகைப் பதிவுகள் அழிந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

சென்னை காவல்துறையில் உள்ள கைரேகைப் பிரிவுதான் இந்திய காவல்துறையிலேயே மிகவும் பழமையான பிரிவாகும். கடந்த 1875ம் ஆண்டு இந்த கைரேகைப் பிரிவு தொடங்கப்பட்டது. ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டது இந்த கை ரேகைப் பிரிவு.

சென்னை காவல்துறையின் பல்வேறு பிரிவுகள் நவீனமயமாக்கப்பட்டு விட்ட போதிலும், கை ரேகைப் பிரிவு மட்டும் இன்னும் அப்படியேதான் உள்ளது. இந்தப் பிரிவை கம்ப்யூட்டர்மயமாக்க அரசு ரூ. 80 லட்சம் நிதி ஒதுக்கியது. ஆனால் என்னகாரணத்தாலோ இன்னும் அது முழுமை அடையாமல் இழுபறியாகவே உள்ளது.

இந் நிலையில் கடந்த 1999ம் ஆண்டு கைரேகைகளை கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்யும் முறை இங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி பேக்ஸ்4 என்ற முறை பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்த முறையால் உரிய பலன் கிடைக்கவில்லை என்பது பின்னர் தெரிய வந்தது.

இதையடுத்து இதன் அட்வான்ஸ் சிஸ்டமான பேக்ஸ்5 முறைக்கு கைரேகைப் பிரிவு மாறியது. ஆனால் இங்குதான் குழப்பமே. ஏற்கனவே இருந்த பேக்ஸ்4 சிஸ்டத்தில் சில மாறுதல்களைச் செய்துதான் இந்த பேக்ஸ்5 முறையை உருவாக்கி அதற்கு மாறியது கைரேகைப் பிரிவு. இதற்கு செலவிடப்பட்ட தொகை ரூ. 60 லட்சமாகும்.

இவ்வாறு டெக்னாலஜி அப்கிரடேசன் செய்தபோது, பேக்ஸ்4-ல் பதிவு செய்து வைக்கப்பட்டிருந்த 2 லட்சம் கைரேகைகள் அழிந்து போய் விட்டனவாம்.

பல முக்கிய குற்றவாளிகளின் கைரேகைகள் இதில் இடம்பெற்றிருந்தன. அவை அனைத்தும் தற்போது அழிந்து போய் விட்டன. இதனால் பல வழக்குகளின் விசாரணையில் பெரும் பாதிப்பு ஏற்படும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து உரிய முறையில் அரசு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கைரேகைப் பிரிவில் பணியாற்றுவோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இருப்பினும் இதை மறுக்கிறார் குற்ற ஆவண காப்பக இயக்குநரான ஐஜி லட்சுமி பிரசாத். பேக்ஸ் 4லிருந்து 5க்கு மாற்றும்போது எந்த கை ரேகையும் அழியவில்லை. மாறாக 75 ஆயிரம் பேருடைய கைரேகைகள் சரியாக பதிவாகாமல் மங்கலாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

குற்ற ரேகைகளை அழிக்க உதவும் கைரேகைப் பிரிவில் இப்படி ஒரு குழப்பமா?

source : aol

Advertisements